செவ்வாய், 14 ஜூன், 2011

தொலைந்து போனவன்


காதலை உன்னிடம் சொல்ல முடியாமல்  
என்னிடமிருந்த தைரியம் கரைந்து விட்டது
 
கவிதைகளில்  காதலை சொல்லி 
உன்னிடம்  சம்மதம் பெற்றேன் .

உன்னை சந்திப்பதற்க்காகவே  சந்தர்ப்பங்களை  
உண்டாக்கினேன்

என் உறவுகளிலே உனக்கு  மட்டுமே
முதல் இடம்  கொடுத்தேன்

உன்னை காதலித்த பிறகு நடந்த நல்ல
விஷயங்களுக்கு உன்னை மட்டுமே பொறுப்பாக்கினேன்

எப்பொழுதும்   என்னை உன்னிடமே
தேடினேன்  
இப்படி உனக்காகவே வாழ்ந்தேன் 

ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம் 
என்றதும் முகம் காட்ட மறுத்து 
ஓடி ஒளிந்து கொண்டாயே 

இப்பொழுது நான் என்னை எங்கே தேடுவேன்?

  






திங்கள், 13 ஜூன், 2011

தவறிய தருணங்கள்


வயது முப்பதை தாண்டிய முதிர் கன்னி நான்

எனது வீட்டில் நடக்கும் பெண் பார்க்கும்
அனுபவங்களை வைத்து அடுக்கி வைக்கலாம்
அத்தியாயங்கள் பல.

பெண் பார்க்கும் சாக்கில் வியாபாரம் பேசும் 
கொள்ளைக் கும்பல் வீட்டுக்கு வருகிறது வாரம் 
ஒன்று என்ற கணக்கில் 

வரதட்ச்சணை என்ற பெயரில் அவர்கள் வீட்டுக்கு 
வேண்டும் பொருட்களை பட்டியலிடும் கூட்டம் ஒன்று.

வியாபாரம் பேசும் முன்பே வயிறு முட்ட தின்று 
தீர்க்கும் கூட்டம் மற்றொன்று.

காதலித்தவனை கைப் பிடிக்க வேண்டுமென்றாலும்
கட்டாயம் இங்கு கட்டணம் செலுத்தப் படவேண்டும் .

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் செய்யப்படும்
உபசரிப்புகளுக்கும் சம்பிரயதங்களுக்கும் 
இயந்திரமாய் பழகி விட்டேன் இப்போது. 

வியாபாரம் என்றால் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் உண்டு.
ஆனால் இதில் கொடுப்பதற்கு மட்டுமே உரிமை உண்டு. 

சொல்லி வைத்தது போல  அத்தனை 
வியாபார பேரங்களும் நிகழ்ச்சியின் 
முடிவிலே முறிந்துதான் போகின்றது.

பேரங்கள் முறிந்து போவதில் எனக்கு சந்தோஷம்தான்
எனக்காக  நடத்தப்படும் இந்த வியாபாரத்தில் 
தங்கத்தை போல என் மதிப்பும்  கூடிக் கொண்டேதான் 
போகிறது.






வியாழன், 9 ஜூன், 2011

பதில் தேடி

உன்னை பார்த்த பிறகு காதலும்  கற்பனையும்
அதிகரித்துவிட்டது.
 
என் காதலை உன்னிடம் சொல்லிவிட்ட போதிலும் 
உன் பதில் மௌனம் மட்டுமே.

உன் பதிலை நான் தெரிந்து கொள்ள நான் காத்திருக்கும் 
நொடிகள் ஒவ்வொன்றும்  தீயைத்  தின்பதற்குச் சமம்.

நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என்
முகத்தில் ஏராளமான  கவலை ரேகைகள். 

காற்றைப் போல வலியைப் போல உன் காதலும்
என் கண்ணுக்குத்  தெரியவில்லை 

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்..









 





திங்கள், 6 ஜூன், 2011

வெற்றியும் தோல்வியும்



நண்பா!..


வெற்றிக்கான உன் பயணம்
தடைபட்டுவிட்டதாக எண்ணாதே

தோல்விகளில்  முடிந்த  முயற்சியின்
பலனாக உன் மனம் சோர்வடைகிறது.     

உடல் சோர்வு பிரச்சனையில்லை நண்பா.
மனச்சோர்வு முதலுக்கே மோசம்.

நிறைவுபெறாத முயற்சிகளை உன் நினைவு
பட்டியலிலிருந்து அகற்று

நான்கு  சுவர்களுக்குள் உன்னை முடக்கி
முயற்சிகளை முடமாக்காதே  


இருட்டுக்குள் இல்லை உன் வெற்றி

வெளியில் வந்து  வெளிச்சத்தின் விரல் பிடித்து
வெற்றியைத்  தேடு

தோல்வி என்பது வெற்றிக்கான
பயணத்தில் ஏற்படும் சம்பவங்களே.



ஒரு வகையில் தோல்வியும் நண்பன்தான்
அதுதான் உன்னை வெற்றிப் பாதையில் 
அழைத்துச் செல்கிறது.

தோல்வி என்ற அஸ்திவாரத்திலேயே
இங்கு வெற்றிக்கான கட்டடம் எழுப்பப்படுகிறது. 

திடீர் வெற்றியோ தொடர் வெற்றியோ
வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை.

நாணயத்தின் இரு பக்கம் போல
வெற்றியும் தோல்வியும்  

திறமையை பட்டை தீட்டிக் கொள்ளும் நேரம்தான்
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான தூரம். 

தோல்வியில் தைரியத்தையும்
வெற்றியில் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்.

 வெற்றி நமதே!


 













 






வியாழன், 26 மே, 2011

காதல் படும் பாடு


உன் மேல் காதல் கொண்டு உன்னிடம் 
கூறிய பொழுது சட்டென்று சம்மதித்தாய் 

அடுத்து வந்த தினங்களில் உனக்கு பிடித்ததெல்லாம் 
எனக்கும் பிடித்தது


கனவுகளில்   மிதந்தேன்

உற்சாகத்தில் உறக்கம் தொலைத்தேன்

கவிதை எழுதி காதல் கிறுக்கன் ஆனேன்.


உனக்காக வானத்தை ரெண்டாக  கிழிப்பேன் 
மின்னலைப் பிடிப்பேன் என்று வாக்கு கொடுத்தேன்.

அதற்குப் பிறகு 

உன் அலுவலகம் உன்  வீடு என மாறி மாறி  இரு சக்கர
வாகனத்தை  இயக்கிய  போது உனக்காக முழு நேர 
ஒட்டுனராகிப் போனேன்.

உன்னை நினைத்து சாப்பிடாமல் என் உடல்  மெலிந்ததோ  தெரியாது
ஆனால் உனக்காக செலவு செய்து  என் பணப் பை இளைத்து விட்டது.


உன் வீட்டு சில்லறை செலவுகளுக்குக் கூட
என் மாத சம்பளத்தில் பட்ஜெட்.


காதல் இப்பொழுது என்னை செலவாளி ஆக்கிவிட்டது.

இது அத்தனையும்  காதல் என்ற பெயரில்.



எஜமானியாய் நீ

உன் குரலுக்கு ஓடோடி வரும் சேவகனாய் நான் 

அனைத்தும் எனக்கும் தெரியும்  

ஆனால் இதை தட்டி கேட்க முடியாமல் 
ஏதோ  ஒன்று என்னை தடுக்கிறது.

அது  உன்மேல் நான்  வைத்திருக்கும் காதல் தானே என் கண்மணி.
 
 




 
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...