சனி, 14 மே, 2011

கலையும் மேகங்கள்

குமார்  அந்த அலுவலத்தில் சேர்ந்து ஒரு வாரத்தை முழுதாக முடித்திருந்தான்.

திவ்யாவின் இடத்திற்குதான் அவன் தேர்ந்தேடுக்கபட்டிருக்கிறான் .அவள்தான் குமாருக்கு இந்த வேலை பற்றிய விவரங்களை சொல்லி கொடுத்து பயிற்சியளிக்க வேண்டும் .

திவ்யாவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. அதற்காக ஏற்கனவே ராஜினாமாவை சமர்ப்பித்துவிட்டவள்.மேனேஜர்  அவளுடைய பணியிடத்தில் வேறொரு நபர் வரும் வரை அவளை காத்திருக்கச்  சொல்லி கேட்டுக் கொண்டார்.    

திவ்யா முற்போக்குத்தனமான  காரியங்களை அதிகம் விரும்புவாள்.அப்படி சிந்திப்பவர்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.   

அவளுடைய  இருக்கைக்கு பக்கத்திலேயே அவனுக்கும் இருக்கை போடப்பட்டது.அவனுடைய பணி குறித்து  அவளிடம் சில சந்தேகங்களை குமார் எழுப்பிய போது,திவ்யா அதிகம் கவனம் செலுத்தாமல் அரைகுறை மனதுடன் அந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தாள்.பிறகு அவனை நோக்கி 

"மிஸ்டர் குமார் நீங்க இப்பதானே  வந்திருக்கீங்க.அதுக்குள்ள என்ன அவசரம்?பொறுமையா கத்துக்கலாம்.நான் ரெண்டு மாசம் இங்கயே இருந்து எல்லாத்தையும் சொல்லி கொடுத்துட்டுதான் போவேன்.டோன்ட் வொர்ரி " என்று கூறினாள். அதற்கு குமார் எந்த விதமான சலனத்தையும் தன்னுடய முகத்தில் காட்டாமல் இருந்தான்.    

மதிய உணவு இடைவேளை.திவ்யா குமாரின் எதிரிலேயே அவனிடம் எதுவும் பேசாமலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.குமார் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு வெளியில் வந்தான்.நல்ல உணவகமாக பார்த்து தன்னுடைய மதிய உணவை முடித்துக்  கொண்டான். பிறகு ஒரு சிகரெட்   எடுத்து  பற்ற வைத்து மிகவும் பொறுமையாக புகைத்தான். மாலை அலுவல்கள் முடிந்து திவ்யா இவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் வீட்டுக்குக் கிளம்பி சென்று விட்டாள்.
 
இந்த  ஒரு வாரம் இப்படியே சென்றது.குமாருக்கு முதல் முறையாக இந்த வேலை மீது ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டது.ஆனாலும் இந்த வேலையை  விட்டுவிட்டு வேறு ஒரு வேலையைத் தேடும் முயற்சிக்குள் இப்போதைக்கு இறங்க வேண்டாம் என்றும் இந்த வேலையின் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் முக்கியமானது என்றும் அவன் மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டான்.

குமார் அன்று வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்றான்.திவ்யாவை காணவில்லை.தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.நீண்ட நேரமாகியும் திவ்யா வராததால் அருகில் இருந்த அவளுடைய தோழி ரேகாவிடம் விசாரித்த போது திவ்யாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால்  அவளால் இன்று அலுவலகம் வர இயலாது என்று தெரிவித்தாள்.

மேனேஜெரின்  அறைக்குள் ரேகா இரண்டு முறை சென்று விட்டுத் திரும்பினாள்.அவள் பரபரப்பாக காணப்பட்டாள்.குமார் அவளிடம் சென்று 

"என்ன ரேகா என்னாச்சு ஒரே பதட்டமா இருக்கீங்க"?
"குமார் இன்னிக்கு ஒரு மணிக்குள்ள டெண்டர் பைல் அனுப்பியாகனும்.திவ்யா வேற இன்னிக்கு லீவ்.அவதான் இந்த டெண்டர் பைல் ரெடி பண்ணி அனுப்புவா.மேனேஜர் ரொம்ப டென்ஷனா இருக்கார்.திவ்யா செல் போனும்  சுவிட்ச் ஆப்லே இருக்கு.இப்போ என்ன பண்றதுன்னே தெரியலே."

குமார் உடனே மேனேஜர் அறைக்குச் சென்றான்.மேனேஜர் அவனைப் பார்த்து 

"சொல்லுங்க குமார்" என்றார்.
"சார் அந்த டெண்டர் பைல் நான் ரெடி பண்ணித் தரட்டுமா"

"உங்களுக்கு தெரியுமா.நீங்களே இங்க வந்து பத்து நாள்தானே ஆகுது."

"பத்து நாள்லே நான் நிறைய தெரிஞ்சுகிட்டேன் சார்.அந்த நம்பிக்கைலதான் சொல்றேன்."

மேனேஜர் குழப்பமான மனநிலையில் " சரி சீக்கிரமா ரெடி பண்ணுங்க" என்றார்
குமாரிடம் முதல் முறையாக  உற்சாகம் தெரிந்தது. தன்னுடைய முன் அனுபவத்தை வைத்து  சரியாக ஒரு மணி நேரத்தில் அந்த பணியை முடித்தான்.

மேனேஜர் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தார்.முதல் முறையாக குமார் என்பவன் அந்த அலுவலகம் முழுவதும் தெரிந்தான்.

மறுநாள் மேனேஜர் தன் அறைக்குள்  சென்றவுடன் திவ்யாவை அழைத்தார்.நேற்று நடந்ததை ரேகா தொலைபேசி மூலம் திவ்யாவுக்கு தெரிவித்துவிட்டாள். அது பற்றித் தான் மேனேஜர் பேசக்கூடும் என்று எண்ணி கொஞ்சம் பயத்துடன்தான் உள்ளே சென்றாள்.


"திவ்யா மார்வேலோஸ் ஜாப்.எப்படி குமாரை பத்து நாள்லே தயார் பண்ணே.நேத்து ஒன் அவர்லே டெண்டர் பைல் ரெடி பண்ணிட்டான்.நானே  எதிர்பார்க்கலே.உன் ட்ரைனிங் தானாமே.குமார் சொன்னான்."        

 மேனேஜர் இப்படிக் கூறியதும் அவள் ஆச்சர்யமும் குழப்பமும் நிறைந்த  மனநிலையில் அறையை விட்டு வெளியே வந்தாள்.இந்த பத்து நாட்களில் நாம் இந்த   வேலையைப் பற்றி ஒன்று கூட சொல்லித் தரவில்லை.குமார் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்.


மாலை ஆறு மணிக்கு அவனைப் பார்த்ததுமே திவ்யா கேட்டாள்.

"நேத்து ஏன் மேனஜர்கிட்டே நான் சொல்லி கொடுத்தேன்னு  பொய் சொன்னீங்க"?

குமார் எதிர்பார்த்ததுதான்.

" பொய் இல்லே.அதுதானே நிஜம் " கிண்டல் செய்தான்.

"நான்தான் ஒண்ணுமே சொல்லித்தரவே இல்லையே "

"நீங்களே சொல்லும்போது அப்போ அதுதான் நிஜம்"

அவளுக்கு அவன் மேல் கோபம் கோபமாக வந்தது.ஆனால் அவன் அன்றைய   அலுவல்கள் முடிந்ததால் வீட்டுக்கு புறப்பட்டான்.திவ்யா தீர்மானமாக நாளை எப்படியாவது அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.ஆனால் இரவு  இந்த விஷயமே அவள்  மனது முழுவதும் ஆக்கிரமித்து தூக்கத்தைக் கெடுத்தது.
மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது திவ்யா குமாரிடம் சென்று 

" கேன் யு  ஜாயின் அஸ் பார் லஞ்ச் " சட்டென்று கேட்ட போது என்ன கூறுவது என்று  தெரியாமல் முழித்து பிறகு சரி என்று ஒப்புக் கொண்டான். தான் கொண்டு வந்த மதிய உணவில் அவனுக்கும் சரிபாதி  கொடுத்தாள்.சாப்பிட்டு முடித்த பின் " தேங்க்ஸ்" என்றான் குமார்.

"இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ்.நீங்க சாப்பிட வந்ததே என்னோட அதிர்ஷ்டம்" திவ்யா சொன்னாள் கொஞ்சம் நக்கலாக.

லேசான புன்னகையை உதிர்த்துவிட்டு புகை பிடிக்க வெளியே வந்தவன் திவ்யாவின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி யோசித்தான்.

மாலை அலுவல்கள் முடிந்து குமார் புறப்படத் தயாரானபோது ,அலுவலகத்தில் யாரும் இல்லாத காரணத்தால்,திவ்யா அவன் எதிரே வந்து, 

"சரி இப்பயாவது சொல்லுங்க.ஏன் மேநேஜெர்கிட்டே பொய் சொன்னீங்க"

"ஒ அதானே பார்த்தேன்.லஞ்ச் உபசரிப்பு பலமா இருந்ததேன்னு. இதுக்குதானா எல்லாம் " 

"ச்சே ச்சே அதுக்காக எல்லாம் நான் அப்படி செய்யல.உங்களை கூப்பிடலாம்னு தோணுச்சு.அதான்.வேற ஒண்ணும் இல்லே "அவசரமாய் அவள் மறுத்த போது அவளிடம் கொஞ்சம் பதட்டம் தெரிந்தது.

"சரி உங்களுக்கு நான் ஏன் அப்படி சொன்னேன்னு தெரியணும்.அவ்வளவுதானே" என்று அவளுடைய கண்களை நோக்கினான்.

அவள் புருவம் உயர்த்தி அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஆவலுடன் பார்த்தாள்.     
    
"நீங்க இன்னும் கொஞ்ச நாள்லே இந்த வேலைய விட்டுட்டு போகபோறீங்க.இந்த சூழ்நிலையில உங்க  லீவால  அந்த டெண்டர் பைல்  போகாம   இருந்ததுன்னா உங்களுக்குதான் கெட்ட பேர்.அதனாலதான் நானே போய் அந்த வேலையை செய்யறேன்னு சொன்னேன்.ஏற்கனவே டெண்டர் பைல் தயாரிச்ச அனுபவம் இருந்ததாலே இதை சுலபமா என்னால பண்ண முடிஞ்சது.இந்த வேலைய விட்டுட்டு நீங்க போகும் போது கூட பொறுப்பா எல்லா வேலையும் பார்த்தீங்கன்னு ஒரு பேர் உங்களுக்கு இருக்கணும்னு நெனச்சேன்.இது ஆபீஸ்ல இருக்குற ஒவ்வொருத்தர் மனசுலயும் இருக்கணும்.திவ்யான்னா வேலையில ரொம்ப பொறுப்புன்னு எல்லாரும் நெனைக்கணும்.இந்த டெண்டர் பைல் நான் முடிச்சதால உங்க வேலையையும்  என்னோட வேலையையும் எல்லாரும் கம்பேர் பண்றதை நான் விரும்பலே.அப்படி கம்பேர் பண்றப்போ இவ்வளவு நாள் நீங்க இந்த கம்பனிக்காக உழைச்சது வீணாப் போயிடும்.இப்போ என்ன ஆச்சு.என்னதான் நான் டெண்டர் பைல பிரமாதமா ரெடி பண்ணியிருந்தாலும் திவ்யாவோட ட்ரைனிங் அப்படின்னு பேசறாங்க இல்லையா.அதான் நான் அப்படி சொன்னேன்." என்று நீண்ட பெரு மூச்சை வெளிபடுத்தினான்  குமார்.           

இப்படி ஒரு சீரியஸ் ஆன விஷயம் இதற்கு பின்னால்  இருக்கும் என்று திவ்யா நினைத்து பார்க்கவே இல்லை.குமார் ஏதோ தமாஷ் செய்கிறான் என்றுதான் நினைத்திருந்தாள்.

எவ்வளவு பெரிய விஷயம் நமக்காக செய்து இருக்கிறான்.இவனைப் பற்றி புரிந்து கொள்ளாமல் அவனிடம் நிறைய விஷயங்களில் எரிந்து விழுந்திருக்கிறோம் என்று தன் மேலேயே அவளுக்கு கோபமாக வந்தது.

அன்று இரவு அவனையும் அவன் பேசியதையும் நினைத்துக் கொண்டே தூங்கிப் போனாள். 

அவர்களுக்குள் நெருக்கம் கூடியது.மதிய உணவை  இது வரை பங்கிட்டு கொடுத்த திவ்யா இப்பொழுதெல்லாம் குமாருக்கென்றே தனியாக  உணவு எடுத்து வந்தாள்.வாங்க போங்க என்பதெல்லாம் வா போ என்று மாறியது.

தினமும்  மாலை வேளைகளில் குமார் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் திவ்யாவை அழைத்துச் சென்று  அவளின் வீட்டு வாசலில் இறக்கி விடுவது என்பது அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் ஆனது.

அப்படித்தான் ஒரு சனிக்கிழமை மாலை அவளை இறக்கி விட்டு கிளம்பும்போது திவ்யா

" குமார் உள்ள வாயேன்.காபி சாப்பிட்டிட்டு போகலாம்" என்றாள்.

"இன்னிக்காவது உள்ள கூப்பிடனும்னு தெரிஞ்சுதே.திவ்யா நான் இன்னொரு நாள் வரேன்" என்றான் குமார் .

"நான் எப்போ கூப்பிட்டாலும் நீ இப்படித்தான் சொல்றே.வீட்டுல போய் என்ன பண்ண போறே.அம்மாவும் ஊர்ல இல்லேனு சொன்னியே.வா காபி போட்டுத் தரேன்.குடிச்சிட்டு கெளம்பு."

அரை மனதுடன் வண்டியை விட்டு கீழிறங்கி வீட்டினுள் சென்றான் குமார்.அது ஒரு உயர் ரக அடுக்கு மாடி குடியிருப்பு.மொத்தம்  பத்து தளங்கள்.திவ்யாவின் வீடு மூன்றாம் தளத்தில்.லிப்ட்டில் ஏறி மூன்றாம் தளத்தை அடைந்தனர்.

ஹால், ஏ.சி வசதியுடன் கூடிய இரண்டு படுக்கை அறை,அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை,டைனிங் ஹால் என்று வீடு மிகப் பிரமாதமாக இருந்தது.

"உட்காரு குமார் .ரெண்டு நிமிஷத்துல வரேன் " என்று திவ்யா கூறிவிட்டு அறைக்குள் சென்று நைட்டிக்கு மாறி வெளியே வந்தாள்.

சற்று நேரத்தில் திவ்யா இரண்டு கோப்பைகளில் காபி எடுத்து வந்து குமாரின் எதிரே வந்து  அமர்ந்தாள். குமார் அவளைப் பார்த்து

"இவ்வளவு பெரிய வீட்ல நீ மட்டும் தனியாவா இருக்கே ?"

"ஆமாம் குமார்.முன்னாடி நானும் ரேகாவும் சேர்ந்து இருந்தோம்.அவளுக்கு கல்யாணமாகி அவ இங்கிருந்து போனப்ப,நானும் சின்னதா வீடு பார்த்து போலாம்னு இருந்தேன். எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடிச்சு.சரி கொஞ்ச நாளைக்காக எதுக்கு வீடு மாத்தறதுன்னு இங்கயே இருந்துட்டேன்."

காபி குடித்து சிறிது நேரம் கழித்து சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான்.திவ்யா உள்ளே சென்று ஆஷ் ட்ரே எடுத்து வந்தாள்.சிகரெட் புகைத்த பின்   

"சரி திவ்யா நான் கெளம்பறேன்" குமார் சொன்னான்.

"இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலமேப்பா.நாளைக்கு சண்டே தானே .வீட்டுலே போய் என்ன பண்ண போறே.கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணியின்னா டின்னேரே ரெடி பண்ணிடுவேன்.சாப்பிட்டு போலாம்.என்ன சொல்ற ?" 
      
இப்பொழுதெல்லாம் குமார் அவள் பேச்சை மறுத்து பேசுவதே இல்லே.இதற்கும் சரி என்றே சொன்னான்.அதற்குப் பிறகு திவ்யா பம்பரமாய் சுழன்று சமையல் செய்தாள்.


பிறகு சற்று நேரம் அங்கிருந்த பத்திரிகைளை எடுத்து  புரட்டிக்கொண்டிருந்தான்  குமார்.
"குமார் டின்னர் ரெடி.வா சாப்பிடலாம் "என்றாள்  திவ்யா.

சாப்பிட உட்கார்ந்த போது மணி ஒன்பதரை.எழுந்த போது மணி பதினொன்றரை.இந்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் எத்தனையோ விஷயங்களைப் பற்றி பேசினார்கள் ,விவாதித்தார்கள்.இருவருக்கும் பிடித்தது,பிடிக்காதது என்று பல விஷயங்கள் இதில் அடங்கும்.

அவள் இரவு அவனை அங்கேயே தங்கச் சொல்லி கேட்ட போது அவன் மறுத்துவிட்டான்.

"சரி வீட்டுக்கு போனவுடனே எனக்கு கால் பண்ணு "

"ஏன்"

"இல்லே இவ்வளவு நேரமாச்சே.தனியாப்  போறே.அதுனாலதான் "

"சரி கால் பண்றேன்" என்று குமார் கிளம்பும்போது மணி பனிரெண்டு.வீட்டுக்கு போய்ச் சேர்ந்தவுடன் முதல்  வேலையாக திவ்யாவுக்கு போன் செய்து விட்டு படுத்தான்.

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை திவ்யாவுக்கு  விடுமுறை.மிகவும் போரடித்ததால் ஷாப்பிங் போகலாம் என்று குமாரை வரச் சொல்லியிருந்தாள். இருவரும் ரங்கநாதன் தெரு,பாண்டி பஜார் என்று ஒரு சுற்று சுற்றி விட்டு வீட்டுக்கு வரும் போது மணி மாலை ஏழு ஆகி இருந்தது.இருவருமே மிகவும் களைப்புடன் காணப்பட்டார்கள்.

"சாரி குமார்.என்னால உனக்கு எவ்வளவு சிரமம்"

"சரி அதெல்லாம் இருக்கட்டும். உள்ள போய் நல்ல காபி போட்டுக் கொண்டு வா"

"பைவ் மினிட்ஸ்ல வரேன்"   என்று திவ்யா உள்ளே சென்று நைட்டிக்கு மாறி முகம் கழுவிக் கொண்டு குமாரிடம் காபி கோப்பையை நீட்டினாள்.

குமார் காபி குடித்து விட்டு சிகரெட் பற்ற வைத்தான்.

"குமார்.சாப்பிட்டிட்டு போகலாம்." என்று அவள் கூறும் போது அவன் கைகடிகாரத்தைப் பார்த்தான்.

"இன்னிக்கு சீக்கிரமா முடிச்சுடறேன்.போரடிச்சுதுன்னா  டிவி பாரு,புக்ஸ் படி " என்று கூறி விட்டு திவ்யா சமையலறை பக்கம் போனாள்.      
     
குமார் சிறிது நேரம் டிவி பார்த்தான்.பிறகு அங்கிருந்த புத்தகங்களை எடுத்து சில பக்கங்களை புரட்டினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் சமையல் தயாரானதால் திவ்யா அவனை சாப்பிட அழைத்தாள்.குமாரும் இன்று கொஞ்சம் சோர்வாகவே காணப்பட்டான்.சாப்பிட்டு முடித்த பின் இருவருமே அருகருகே அமர்ந்து கொண்டனர்.திவ்யா அவனிடம் நிறைய பேசினாள்.அவள் குடும்பம் பற்றி,ஹைதராபாத்திலிந்து சென்னைக்கு பணியின் பொருட்டு வந்தது,தன்னுடைய வருங்கால கணவன் பற்றி என்று நிறைய பேசினாள்.அவள் அவனுடன் பேசும் ஒவ்வொரு முறையும் அவள் கை மிக எதேய்சையாக அவன் மேல் பட்டு பட்டுத் திரும்பியது.சில முறை குமார் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளை கேட்டு சிரிக்கும்போது அவன் தோளில் தட்டி சிரித்தாள்.

குமாருக்கு அந்த நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை.சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திவ்யாவை அப்படியே அங்கிருந்த சோபாவில் சாய்த்தான்.பிறகு அவளை இறுகக்  கட்டி அணைத்து அவள் உதட்டில் முத்தமிட்டான்.இதற்கு திவ்யாவிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராத நிலையில்,அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர்கள் இருவருமே எதிர்பார்க்காத  அந்தத் தவறு நிகழ்ந்தே விட்டது.

எப்படி நிகழ்ந்தது இது?குமாருக்கு புரியவில்லை.திவ்யாவின் முகத்தைப் பார்க்க தைரியமில்லதவனாய் வீட்டை விட்டு வெளியே வந்தான்.பைக்கை எடுத்து மிக வேகமாக செலுத்தினான்.ஒயின் ஷாப் முன்பு வண்டியை நிறுத்தி உள்ளே சென்று சற்று அதிகமாகவே குடித்தான்.தள்ளாடித்  தள்ளாடி வீட்டுக்கு போய் சேர்ந்த போது மணி பன்னிரண்டை  தாண்டியிருந்தது.      

மறுநாள் காலை கண் விழித்த போது மணி பத்து.

அவளுடன் பேசலாம் என்று அவள் செல் போனுக்கு முயற்சி செய்தான்.மறுமுனையில் மணி ஒலித்ததே தவிர அவள் இவனுடன் பேச தயாராக இல்லை என்பது புலப்பட்டது.

நான்கு நாட்கள் ஆயிற்று.குமார் அலுவலகம் செல்லவில்லை.திவ்யாவை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதனால்  உடல் நிலை சரியில்லை என்று சொல்லி லீவ் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே தன்னை முடக்கிக் கொண்டான்.ஆனால் திவ்யா எப்படி இருக்கிறாள்.அவளை சந்தித்து     மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கிளம்பினான்.

அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தான்.இரண்டு நிமிடம் கழித்து திவ்யா கதவை கொஞ்சமாக திறந்துவிட்டு மறுநிமிடமே உள்ளே சென்று சோபாவில் அமர்ந்துகொண்டாள்.       
   
திவ்யாவின் செய்கையால் உள்ளே செல்வதா அல்லது வெளியேறுவதா      என்று  குமார் கொஞ்சம் குழம்பிப் போனான்.ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்று திவ்யாவின் எதிரில் உட்கார்ந்தான்.
எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று குமார் கொஞ்சம் தடுமாறி,பின் ஆரம்பித்தான்.
"சாரி திவ்யா.என்னோட உணர்சிகளை  கட்டுபடுத்த தெரியாம ...... ஒரு மிருகமா மாறிட்டேன்.உன்னோட நட்பை நான் எந்த அளவுக்கு பெருமையா   நெனச்சேன்னு உனக்குத் தெரியாது திவ்யா.ஆனா  அது என்னாலேயே களங்கம் ஆயிடும்னு நெனைச்சுக் கூடப் பாக்கலே.  

இதுக்கு பிரயசித்தமா நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறேன்.நீ என்ன சொல்றே திவ்யா"

இதுவரை அமைதியாக அவன் பேசுவதைக் கேட்ட திவ்யா இப்பொழுது அவனுக்கு பதில் சொல்ல தயாராகிவிட்டாள் என்று தெரிந்தது.

"குமார் உன்கிட்டே தமிழ் சினிமா பாதிப்பு அதிகமா இருக்குன்னு நெனைக்கிறேன்.அதான் என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு    சொல்றே.அதாவது கெடுத்தவனையே கல்யாணம் பண்ணிக்கறது.

 நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிடோம்னா என்னாகும்னு நெனைக்கிறே?இப்போ நீ என்னை கல்யாணம் பண்ணிக்க முன் வந்தது  என் மேல இருக்குற பரிதாபத்தினால.பரிதாபத்தை   வைச்சுக் குடும்பம் நடத்த முடியாது. கல்யாணத்துக்கு பின்னால காதல்தான் இருக்கணும்.அது தான் உறுதியான உறவுக்கு பாலமா இருக்கும்.பரிதாபம் இருந்தா அது போக போக சலிச்சுப் போயிடும்.      
     
 இப்போ உன் மேல எனக்கு காதல் கிடையாது.உனக்கும் என் மேல அப்படித்தான்னு நெனைக்கிறேன்.அப்படியே நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நடந்து முடிந்த கசப்பான சம்பவங்கள் ஞாபகத்துக்கு   வந்து நம்ம ரெண்டு பேரையும்  சீண்டும்.சண்டை  வரும் .நிம்மதி போயிடும்.    

நடந்த சம்பவங்கள்ல எனக்கும் பொறுப்பிருக்கு.நீ என்கிட்டே அந்த மாதிரி நடந்துகிட்டப்போது எனக்கு விருப்பமில்லைன்னா நான் சத்தம்  போட்டுருக்கணும்.இல்லே கைல கெடச்ச எதையாவது எடுத்து உன்னை நான்   
தாக்கிருக்கணும்.அப்படி நான் எதுவுமே செய்யல.உன் செயல்களுக்கு எதிர்ப்பே காட்டாம அமைதியா உன்ன நான் அனுமதிச்சிருக்கேன் .அப்படீன்னா நானும் என்னுடைய உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடியிருக்கேன்.அதுக்கு இந்த சம்பவத்தை நான் பயன்படுத்தியிருக்கேன்.

நீ சொன்ன மாதிரி நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்னா,இந்த சம்பவங்கள் நம்ம ரெண்டு பேரோட மனசிலேருந்து அழியணும்.முக்கியமா  ஒருத்தர் மேல ஒருத்தருக்கு உண்மையான காதல் வரணும்.அது எல்லாம் சாத்தியமான்னு தெரியல"

குமார் அமைதியாக அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்துவிட்டு

" அப்படின்னா உன் முடிவு ....."

"கவலைப்படாதே குமார்.நான் கோழை இல்லே.நிச்சயமா தற்கொலை எல்லாம் என்னோட சிந்தனையில் இல்லே."

என்று கூறி விட்டு அறைக்குள் சென்று நாளை ஹைதராபாத் செல்வதற்கு துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.


குமார் மேற்கொண்டு எதுவுமே பேச முடியாமல் வீட்டுக்கு வந்து  கதவை தாழிட்டுக் கொண்டு ஓவென்று கதறி அழுதான்.
     
           
 

         



 
  
    
           












4 comments:

மதுரை சரவணன் சொன்னது…

கதைக்கு நல்ல முடிவு.. விறு விறுப்பான நடை... வாழ்த்துக்கள்

முரளிநாராயணன் சொன்னது…

@மதுரை சரவணன்நன்றி திரு.மதுரை சரவணன்.உங்கள் விமர்சனம் மேலும் எழுதுவதிற்கு எனக்கு உற்சாகமளிக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கதை மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது.
அடுத்து என்ன ஆகுமோ என்ற ஆவலைத்தூண்டுவதாக இருந்தது.
முடிவு சற்றே எதிர்பாராததாக, பொதுவாக யாரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியததாக இருந்தாலும், இதுவும் நல்ல முடிவு தான் என்று சொல்லும்படியாக இருந்தது‘திவ்யா’ வின் உறுதியான, நியாயமான, யதார்த்தமான பேச்சுக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

முரளிநாராயணன் சொன்னது…

உங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றி

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...