கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூன், 2011

தொலைந்து போனவன்


காதலை உன்னிடம் சொல்ல முடியாமல்  
என்னிடமிருந்த தைரியம் கரைந்து விட்டது
 
கவிதைகளில்  காதலை சொல்லி 
உன்னிடம்  சம்மதம் பெற்றேன் .

உன்னை சந்திப்பதற்க்காகவே  சந்தர்ப்பங்களை  
உண்டாக்கினேன்

என் உறவுகளிலே உனக்கு  மட்டுமே
முதல் இடம்  கொடுத்தேன்

உன்னை காதலித்த பிறகு நடந்த நல்ல
விஷயங்களுக்கு உன்னை மட்டுமே பொறுப்பாக்கினேன்

எப்பொழுதும்   என்னை உன்னிடமே
தேடினேன்  
இப்படி உனக்காகவே வாழ்ந்தேன் 

ஒரு நாள் நமக்கு எப்பொழுது திருமணம் 
என்றதும் முகம் காட்ட மறுத்து 
ஓடி ஒளிந்து கொண்டாயே 

இப்பொழுது நான் என்னை எங்கே தேடுவேன்?

  






திங்கள், 13 ஜூன், 2011

தவறிய தருணங்கள்


வயது முப்பதை தாண்டிய முதிர் கன்னி நான்

எனது வீட்டில் நடக்கும் பெண் பார்க்கும்
அனுபவங்களை வைத்து அடுக்கி வைக்கலாம்
அத்தியாயங்கள் பல.

பெண் பார்க்கும் சாக்கில் வியாபாரம் பேசும் 
கொள்ளைக் கும்பல் வீட்டுக்கு வருகிறது வாரம் 
ஒன்று என்ற கணக்கில் 

வரதட்ச்சணை என்ற பெயரில் அவர்கள் வீட்டுக்கு 
வேண்டும் பொருட்களை பட்டியலிடும் கூட்டம் ஒன்று.

வியாபாரம் பேசும் முன்பே வயிறு முட்ட தின்று 
தீர்க்கும் கூட்டம் மற்றொன்று.

காதலித்தவனை கைப் பிடிக்க வேண்டுமென்றாலும்
கட்டாயம் இங்கு கட்டணம் செலுத்தப் படவேண்டும் .

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் செய்யப்படும்
உபசரிப்புகளுக்கும் சம்பிரயதங்களுக்கும் 
இயந்திரமாய் பழகி விட்டேன் இப்போது. 

வியாபாரம் என்றால் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் உண்டு.
ஆனால் இதில் கொடுப்பதற்கு மட்டுமே உரிமை உண்டு. 

சொல்லி வைத்தது போல  அத்தனை 
வியாபார பேரங்களும் நிகழ்ச்சியின் 
முடிவிலே முறிந்துதான் போகின்றது.

பேரங்கள் முறிந்து போவதில் எனக்கு சந்தோஷம்தான்
எனக்காக  நடத்தப்படும் இந்த வியாபாரத்தில் 
தங்கத்தை போல என் மதிப்பும்  கூடிக் கொண்டேதான் 
போகிறது.






வியாழன், 9 ஜூன், 2011

பதில் தேடி

உன்னை பார்த்த பிறகு காதலும்  கற்பனையும்
அதிகரித்துவிட்டது.
 
என் காதலை உன்னிடம் சொல்லிவிட்ட போதிலும் 
உன் பதில் மௌனம் மட்டுமே.

உன் பதிலை நான் தெரிந்து கொள்ள நான் காத்திருக்கும் 
நொடிகள் ஒவ்வொன்றும்  தீயைத்  தின்பதற்குச் சமம்.

நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என்
முகத்தில் ஏராளமான  கவலை ரேகைகள். 

காற்றைப் போல வலியைப் போல உன் காதலும்
என் கண்ணுக்குத்  தெரியவில்லை 

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்..









 





திங்கள், 6 ஜூன், 2011

வெற்றியும் தோல்வியும்



நண்பா!..


வெற்றிக்கான உன் பயணம்
தடைபட்டுவிட்டதாக எண்ணாதே

தோல்விகளில்  முடிந்த  முயற்சியின்
பலனாக உன் மனம் சோர்வடைகிறது.     

உடல் சோர்வு பிரச்சனையில்லை நண்பா.
மனச்சோர்வு முதலுக்கே மோசம்.

நிறைவுபெறாத முயற்சிகளை உன் நினைவு
பட்டியலிலிருந்து அகற்று

நான்கு  சுவர்களுக்குள் உன்னை முடக்கி
முயற்சிகளை முடமாக்காதே  


இருட்டுக்குள் இல்லை உன் வெற்றி

வெளியில் வந்து  வெளிச்சத்தின் விரல் பிடித்து
வெற்றியைத்  தேடு

தோல்வி என்பது வெற்றிக்கான
பயணத்தில் ஏற்படும் சம்பவங்களே.



ஒரு வகையில் தோல்வியும் நண்பன்தான்
அதுதான் உன்னை வெற்றிப் பாதையில் 
அழைத்துச் செல்கிறது.

தோல்வி என்ற அஸ்திவாரத்திலேயே
இங்கு வெற்றிக்கான கட்டடம் எழுப்பப்படுகிறது. 

திடீர் வெற்றியோ தொடர் வெற்றியோ
வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை.

நாணயத்தின் இரு பக்கம் போல
வெற்றியும் தோல்வியும்  

திறமையை பட்டை தீட்டிக் கொள்ளும் நேரம்தான்
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான தூரம். 

தோல்வியில் தைரியத்தையும்
வெற்றியில் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்.

 வெற்றி நமதே!


 













 






வியாழன், 26 மே, 2011

காதல் படும் பாடு


உன் மேல் காதல் கொண்டு உன்னிடம் 
கூறிய பொழுது சட்டென்று சம்மதித்தாய் 

அடுத்து வந்த தினங்களில் உனக்கு பிடித்ததெல்லாம் 
எனக்கும் பிடித்தது


கனவுகளில்   மிதந்தேன்

உற்சாகத்தில் உறக்கம் தொலைத்தேன்

கவிதை எழுதி காதல் கிறுக்கன் ஆனேன்.


உனக்காக வானத்தை ரெண்டாக  கிழிப்பேன் 
மின்னலைப் பிடிப்பேன் என்று வாக்கு கொடுத்தேன்.

அதற்குப் பிறகு 

உன் அலுவலகம் உன்  வீடு என மாறி மாறி  இரு சக்கர
வாகனத்தை  இயக்கிய  போது உனக்காக முழு நேர 
ஒட்டுனராகிப் போனேன்.

உன்னை நினைத்து சாப்பிடாமல் என் உடல்  மெலிந்ததோ  தெரியாது
ஆனால் உனக்காக செலவு செய்து  என் பணப் பை இளைத்து விட்டது.


உன் வீட்டு சில்லறை செலவுகளுக்குக் கூட
என் மாத சம்பளத்தில் பட்ஜெட்.


காதல் இப்பொழுது என்னை செலவாளி ஆக்கிவிட்டது.

இது அத்தனையும்  காதல் என்ற பெயரில்.



எஜமானியாய் நீ

உன் குரலுக்கு ஓடோடி வரும் சேவகனாய் நான் 

அனைத்தும் எனக்கும் தெரியும்  

ஆனால் இதை தட்டி கேட்க முடியாமல் 
ஏதோ  ஒன்று என்னை தடுக்கிறது.

அது  உன்மேல் நான்  வைத்திருக்கும் காதல் தானே என் கண்மணி.
 
 




 
 
  

சனி, 14 மே, 2011

கனவில் கடவுள்

 உறங்கிக் கொண்டிருந்த என் குழந்தை
கொஞ்சம் சிணுங்கியது.
உறக்கம் கலையாமலேயே புன்னகைத்தது.

காரணமே புரியாமல் குழந்தையை
உற்று நோக்கியபடியே இருந்த 
என்னைப் பார்த்து அம்மா சொன்னாள்.

குழந்தையின் கனவில் கடவுள் வந்து 
குழந்தையுடன் விளையாடுவரென்று.

நான் கேட்டேன் 'ஏனம்மா என்
கனவில் கடவுள் வருவதில்லை'

அம்மா சொன்னாள் கடவுள்
கள்ளம் கபடமில்லாதவர்களின் கனவில்
மட்டுமே வருவாரென்று.

அம்மா சொல்வது சரியாக இருக்குமோ?






திங்கள், 11 ஏப்ரல், 2011

அந்த இரண்டு சொற்கள்

இரண்டு நாட்கள் முன் வரை கூட
நன்றியையும் மன்னிப்பையும் 
நாம் வெளிப்படுத்தியதே  இல்லை  


அந்தச் சொற்கள் இரண்டும் நமக்குள் 
அந்நியத்தை ஏற்படுத்துகிறது என்றாய் நீ.

ஆனால் நேற்று முன்தினம் உன் திருமணத்திற்காக 
என் காதலை துறக்க நான் சம்மதித்த பொழுது 
முதல் முறையாக  நன்றியையும் மன்னிப்பையும் 
மாறி மாறிக் கூறி என்னை நீ அந்நியப்படுத்தி  விட்டாய்.       


அடையாளங்கள்

நம் சந்திப்பின் நிகழ்வுகளை நினைவுகளாக்கி  
அத்தியாயங்களாய் மூளைக்குள் அடுக்கி வைத்திருக்கிறேன்

சந்திப்பின் முடிவில் நீ புறப்பட்டுச் சென்ற பின்
ஏற்படும் வெற்றிடத்தை இந்த நினைவுகளே நிரப்புகின்றன.


வியாழன், 31 மார்ச், 2011

ஏமாற்றும் காதல்

அன்பே ஆருயிரே 
எப்படி முடிந்தது உன்னால் 

நம் ஒரு வருடக் காதலை ஒரு நொடியில்
உதறித் தள்ள எப்படி முடிந்தது உன்னால் 

எப்படிப்பட்டக்  காதல் இது!!

கண்ணியமான காதலுக்கு எல்லை வகுத்து 
சராசரிக் காதலின் மரபை உடைத்தோமே.

இது சராசரிக் காதல் அல்ல என்று எத்தனையோ முறை 
கூறிய நீயே இன்று இந்தக்  காதலை உதறி சராசரி ஆக்கி விட்டாய்.

பெற்றோர்களுக்காக  ஒளிந்து மறைந்து காதலித்தோமே அன்றி 
நம் காதலுக்குள் ஒளிவு மறைவு இருந்ததில்லை 

கரங்கள் கோர்த்து எத்தனையோ விஷயங்களைப் பற்றி 
நாம் சூடாக விவாதித்ததுண்டு 

விலகி நின்று வேடிக்கையாய் பேசியதுமுண்டு

முத்தத்திற்கு கூட முன் அனுமதி வாங்கித்தானே செயல்படுத்தினேன் 

காதலில் பிரிதல் என்பது பெண்ணிடம் காதலை சொல்வதை விடக்  கடினமானது.

உலகில் அனைத்துமே மாற்றங்களுக்குட்பட்டது  என்று கூறுவார்கள்.
ஆம் உன் காதல் உட்பட.

எனக்கு உன்னை பிடித்ததற்கும் உனக்கு என்னை பிடிக்காததர்க்கும்
இப்பொழுது வரை காரணம் பிடிபட வில்லை என் கண்மணியே.

இப்போது நான் என் செய்வது?

இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு
பிறக்க போகும் மகளுக்கு உன் பெயரை வைக்கச் சொல்கிறாயா?

மன்னிக்க வேண்டும் என் முன்னாள் காதலியே

எனக்கும் வேறு வேலைகள் உண்டு.




    






திங்கள், 28 மார்ச், 2011

எங்கேயும் அழுக்கு


இங்கு லஞ்சம் வாங்குபவனுக்கும் கூச்சமில்லை
கொடுப்பவனுக்கும்  கூச்சமில்லை

வாங்காமல் இருப்பவனுக்கும் வலை விரிக்கபடுகிறது
அவனையும் கூட்டுக் களவாணி ஆக்க

மக்களின் தேவை அறிந்து மக்களையும் ஊழலுக்குள்
இழுத்து விட்டதுதான் இருபத்தியோரம் நூற்றாண்டில் 
நாம் செய்த புதுமை

மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ  முப்பத்தைந்து சதவிதம்
ஒரு வேளை சாப்பாடுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறது - புள்ளி விவரம்

கருப்பு பணம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில்
இந்தியாவுக்கு கிடைத்திருப்பது முதலிடம்


ஊழல் தங்களை பாதிக்காத வரையில்
ஊழல் ஒரு பிரச்சனையில்லை மேல் தட்டு மக்களுக்கு

ஊழல் தங்கள் வாழ்க்கையை பாதித்தாலும் ஊழலை எதிர்த்து போராட முடியாமல் தினப்படி பிழைப்பைத் தேடும் கீழ்த் தட்டு மக்கள்

ஊழலைப் பற்றி படித்து ஊழலுக்கு எதிராக  வீட்டுக்குளேயே
கோஷமிட்டு வீட்டுக்குளேயே  முடங்கி போகிறது நடுத்தர வர்க்கம்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக 

ஏழைகள் மேலும் ஏழைகளாக


இந்தியா இப்படி ஒரு பக்கமாக  வளர்ச்சி அடைகிறது

இங்கு நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டால்
முற்றும் என்று போடமுடியாமல் தொடர வேண்டி வரும்.

வாழ்க இந்திய ஜனநாயகம்.








 










 
























வியாழன், 17 மார்ச், 2011

எது சிறந்தது ?



வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில்


எது சிறந்தது


புறப்பட்டேன் சிலரை கேட்க


எதிரே தென்பட்ட ஆஸ்பத்திரியில் நுழைந்து
சற்று முன்னரே குழந்தை பெற்றவளிடம் கேட்டேன்


அவள்  சொன்னாள் ' இது போன்ற தருணத்திற்காக காத்திருப்பதுதான்'


அடுத்தவனிடம் பணம் பெற்றவனை பார்த்து கேட்டேன்


கடன் வாங்கமலேயே இருப்பதுதான் சிறந்தது என்றான் அவன்.


காதலிக்காக காத்திருப்பதே சிறந்தது என்று வேறொருவன் சொன்னான்


வேலை தேடி அலையும் ஒருவனை கேட்ட போது பொழுது  கல்லூரியில் படித்த காலம் மட்டுமே சிறந்தது என்றான்


 எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கேட்ட போது
போட்ட பணத்தை ஒரே வருடத்தில் அள்ளுவதே சிறந்தது என்றார்


ஆளுங்கட்சியின் சார்பாக  போட்டியிடும் வேட்பாளரை கேட்ட போது
எப்பொழுதும் ஆளுங்கட்சியாகவே இருப்பதுதான் சிறந்தது என்றார்


சிறிது நாட்களுக்கு முன் திருமணம் முடித்த ஒருவர் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த காலமே  சிறந்தது என்றார்


முதியவரை கேட்ட பொழுது  குழந்தையாய்    இருப்பதே
சிறந்தது என்றார்


மரணிக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து கேட்ட பொழுது பிறக்காமலே இருப்பதுதான் சிறந்தது என்றார்.











திங்கள், 27 செப்டம்பர், 2010

காதல் பாடம்

அவளை அலுவலகத்தில் முதல் நாள்
பார்த்ததில் இருந்தே அவன் 
பசி மறந்தான்          
தூக்கம் தொலைத்தான்

 விடுப்பே எடுக்காமல் அவனுடைய
அலுவலக நாட்கள் கரைந்தன.

அவள் விடுப்பில் சென்ற பொழுது
அவளைக் காண முடியாமல் அவன் கண்கள் மட்டுமல்ல இதயமும்  கனத்தது.

அவள் ஓரக் கண்ணால் அவனைப்  பார்த்து
புன்னகையை வீசிய போதெல்லாம்
அவன் இதயம் ஒவ்வொரு முறையும் கீழே நழுவியது.

மதிய உணவை இருவரும் பங்கிட்டுக் கொண்டபோது
 இது போன்றதொரு உன்னதமான காதல் உலகில் இல்லை
என்று அவனுக்குளேயே கூறிக் கொண்டான்

அவளை  இருசக்கர வாகனத்தில் 
பின்னால் உட்காரவைத்து நகரை 
வலம் வந்த போது
காதல் அவனை இன்னும்
கொஞ்சம்  இளைஞனாக்கியது.
   
அவளை நினைத்து உருகி கவிதைகள் 
எழுதிய போது காதல் அவனை  கவிஞனாக்கியது

தெருவில் நடந்த சண்டையை விலக்கி
சமாதனம் செய்த போது காதல் அவனை
சமுதாயத்தின் காவலானக்கியது.

அதே தெருவில் மறுநாள் அவளை சீண்டிய இருவரிடம் 
அவன் சண்டையிட்ட  போது காதல் அவனை வீரானக்கியது

 திடீரென்று  அலுவலகத்தில் ஒரு நாள் அவள்
 திருமண அழைப்பிதழை  நீட்டிய போது
அவன் அதிர்ச்சியுடன் வாழ்த்துக்களைக் கூறி
 கழிவறைக்குள்  போய் தாழிட்டுக்கொண்டு
  ' ஒ'வென்று அழுதான்.

காதல் இன்று அவனை கோழையாக்கியது 

புதன், 15 செப்டம்பர், 2010

வாழ்க்கை

என் காதலை சொல்லியபோது வீட்டிற்குள்
உள்நாட்டுப் போரே ஏற்பட்டது போன்ற ஒரு பிரமை

அப்பா கோபத்தில் எகிறி குதித்ததில்
வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளி
அதிகரித்துப் போனது

என் காதலின் உறுதி தெரிந்து என்
உடமைகளுடன் நானும் வெளியேற்றப்பட்டபோது
அம்மா கதறி அழுதாள்.

சங்கடத்துடன் வெளியே வந்து
காதலியை தேடி ஓடி 
உடனடியாகத் திருமணம் என்றேன்.

சற்று  தயங்கி பின்னர் ஒப்புக் கொண்டாள்

ஓடுகாலிகள் என்ற பட்டத்தை தாங்கி
வாடகைக்கு வீடு பிடித்து
சந்தோஷத்தை இழந்து குடி புகுந்தோம்

வருடம் ஒன்று உருண்டு விட்ட நிலையில்
என் மனைவி பிரசிவிக்கப் போகும்
குழந்தையைக்  காண அம்மாவும் அப்பாவும்
ஓடி வந்தனர்.

பிறக்கப்  போவது பேரனா பேத்தியா
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் விவாதம்

'ஒரு பேரனோ பேத்தியோ பொறந்துட்டா 
எல்லாத்தையும்  மறந்துடுவாங்க'  

பக்கத்துக்கு வீட்டுக்காரர் எப்பொழுதோ
சொன்னது நினைவுக்கு வந்தது.






  

திங்கள், 13 செப்டம்பர், 2010

இளமைக் கனவு

அவள் என் கரம் பற்றி  இழுத்துச் சென்று
என் கண்களை உற்று நோக்கி என்னை "காதலிக்கிறேன்" என்றாள்
என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
வார்த்தைகளில் நிரப்ப முடியாத சந்தோஷம்.
என் சம்மதத்தை புன்னகையாக தெரிவித்தேன்.

பின் மீண்டும் அவளை சந்தித்தபோது
எப்போது திருமணம் என்றேன்
இரண்டு நாட்களில் என்றாள்.
மீண்டும் நான் வானத்தில் பறந்தேன்.

 சுற்றத்தார் சூழ மேள தாளத்துடன் மண்டபம் பரபரக்க
வெட்கத்துடன் அவள்
தாலியை  கையில் வைத்துக்கொண்டு நான்
அப்பா சட்டென்று என்னை உலுக்கி "மணி ஆவுது எழுந்திரு" என்றார்

நான் கடிகாரம் பார்த்தேன் மணி ஆறு
இது கனவா ?
பரவாயில்லை இருக்கட்டும் .
ஒரு சந்தேகம். இந்தக் கனவு பலிக்குமா?


 

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

அவசரக் காதல்

இன்று காலை அவளை பூங்காவில்
நடைப் பயிற்சியின் போது பார்த்தேன்.
பிடித்திருந்தது.
அவளிடம் சொன்னேன் 'ஐ லவ் யு '
பிறகு சொல்வதாய் சொன்னாள் அவள் முடிவை.
ஆனால் அன்று  மாலையே வந்தது அவள் 
சம்மதம் அலைபேசியில் குறுஞ்செய்தியாக 
அதற்குப் பிறகு இரண்டு வாரத்தில் திருமணம்.
மூன்றாம் மாதத்திற்குப் பின் காதல் கசந்தது.
எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும் பிடிக்கவில்லை
ஒற்றுமையாக விவாகரத்துக் கோரி
ஒரு வருடத்தில் பிரிந்தோம்.

  

திங்கள், 6 செப்டம்பர், 2010

காதலிக்கு கவிதை

 நேற்று படித்த கவிதை ஞாபகம்  வர சட்டென்று
என் காதலியிடம் கேட்டேன் "உன்னைப் பற்றி கவிதை சொல்லவா" என்று
அவளும் "ம்" என்றாள்  ஆர்வத்துடன்.
நான் தொடங்கினேன்

உன் முகம் முழு நிலவு போன்றது
புருவம் பிறை நிலா
கண்கள் மீன்களுக்குச்  சமம்
உன் பார்வையோ கதிர் வீச்சு
கழுத்து வெண் சங்கு போலுள்ளது
பற்களோ முத்து
சொற்களோ தேன்
மொத்தத்தில் உன் அழகுக்கு நிகரேது

முடித்துவிட்டு அவளையே பார்த்தேன்

அவள் என் தலை முடியை கோதிவிட்டு கூறினாள்
"ச்சீ போடா லூசு"
Related Posts Plugin for WordPress, Blogger...